இந்த அற்புதத்தை உங்கள் வாழ்க்கையில் வரவேற்றுக்கொள்ளுங்கள்.
இரு கரங்களையும் விரித்து.
“ஆம், எனக்குக் கிடைத்திருக்கும் இந்த அழகை
நான் மனமார அரவணைத்துக்கொள்ள விரும்புகிறேன்” என்று சொல்லுங்கள்.
குரு பேசுகிறார், நாம் கேட்கிறோம் —
நமக்குள் ஏதோ ஒன்று விழித்தெழுகிறது.
ஏதோ ஒன்று இனிமையாக உணரப்படுகிறது; நமக்குள் ஏதோ ஒன்று நடனமாடத் தொடங்குகிறது.
ஆம்.
“நான் நீங்கள் சொல்வதைக் கேட்பேன். ஏனென்றால், என் வாழ்க்கையில் நீங்கள் சொல்வதைப் போல் இதுவரை யாரும் என்னிடம் சொல்லியதில்லை...”
நீங்கள் எனக்கு நம்பிக்கையைக் கொண்டு வருகிறீர்கள்; ஒரு வாக்குறுதியைக் கொண்டு வருகிறீர்கள்.
என் வாழ்க்கைக்கு ஒளி தரும் ஒரு செய்தியை நீங்கள் கொண்டு வருகிறீர்கள்.
அந்தக் குரு சொல்வதைக் கேளுங்கள்.
கடக்கவே முடியாதவை போலத் தோன்றும் அந்த ஆழமான பிளவுகளின் குறுக்கே பாலங்கள் கட்டப்படட்டும். அப்போது இந்த வாழ்க்கையின் உண்மையான அற்புதம் உங்களுக்காக உயிர்பெறும்.
மனிதர்கள் அந்த ஒன்றை—அந்த ஒரே மகிழ்ச்சியை, அந்த ஒரே அழகை—கொண்டாட ஒன்றுகூடும்போது, நானும் அங்கே இருக்க விரும்புகிறேன்.
ஏனென்றால், என்னைப் பொறுத்தவரை இந்தப் பூமியில் அதைவிட ஆழமானது வேறொன்றுமில்லை.
அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட மக்கள் வரும்போது, நான்... பேச்சிழந்து நிற்கிறேன். ஏனெனில் அது எவ்வளவு உண்மையானது என்பதை நான் அறிவேன்.
ஒருவர் இங்கே வந்து கேட்பதற்கு மேற்கொள்ளும் அர்ப்பணிப்பு—அப்படிப்பட்டவர்களிடம்தான் நான் பேசுகிறேன்.
இந்த வாழ்க்கையில் ஆர்வமுள்ளவர்களிடம் நான் பேச விரும்புகிறேன்—என்னிடம் சொல்வதற்கு ஒன்று இருக்கிறது.
நிறைவை அடைய விரும்புகிறவர்களே, உங்களுக்காக என்னிடம் ஒரு செய்தி இருக்கிறது.
தங்கள் இதயத்தின் குரலைக் கேட்க விரும்புகிறவர்களுக்கு,
நான் ஓர் அழகான பாடலைப் பாடுவேன்.
இந்த வாழ்க்கை, இந்தத் தருணம்—காட்டுவதற்கு ஒருவர்; காணத் தயாராக இன்னொருவர்.
காட்டுவதற்கு ஒருவர் முன்வந்து, காண்பதற்கு இன்னொருவர் தயாராக இருந்தால்—அற்புதம் நிகழ்கிறது.
அற்புதம் நிகழ்கிறது.
இங்கே விடுதலை பெறுவது பறவைகளோ பட்டாம்பூச்சிகளோ அல்ல; மனிதர்கள்தான் இங்கே விடுதலை பெறுகிறார்கள்.
இங்கேதான் சிறகற்றவர்களும் பறக்கிறார்கள்.
ஞானம் என்னும் இந்த அழகான, அற்புதமான உலகத்தின் மாயமும் இதுதான்.
இங்கேதான் உயிருடன் இருப்பவர்களுக்கு வாழ்க்கையைப் பற்றிக் கற்றுக்கொடுக்கப்படுகிறது.